ல நூற்றாண்டுகளுக்கு முன்பாக, நமது நாட்டில் பௌத்தமும் ஜைனமும் மிகப்பிரபலமடைந்து சனாதன தர்மம் பொலிவிழந்திருந்தது. அந்த காலகட்டத்தில்தான் பரமேஸ்வரனின் அவதார மாகத் தோன்றினார் ஆதிசங்கரர். இளம்வயதிலேயே தந்தையை இழந்து, தாயின் அனுமதியுடன் துறவறம் மேற்கொண்டு, வேதம், சாஸ்திரம் எல்லாவற்றையும் கற்றுத்தேர்ந்து பெரும் புகழோடு இருந்தார்.

சிவபெருமானின் ஆணைக்கேற்ப வேதங்களையும் தர்மங்களையும் பரப்ப நான்கு திசைகளிலும் நான்கு மடங்களை உருவாக்கி, அவருடைய சீடர்களைப் பீடாதிபதிகளாக அமர்த்தினார். சாதாரண மக்களின் நடைமுறைக்கேற்ப பஞ்சாயதன பூஜை முறையையும் உருவாக்கினார். மேலும், ஆறு சமய நெறிகளையும் ஸ்தாபித்தார். அவருக்குப்பின் வந்த ஆச்சார்யார்களுள் மிகவும் போற்றப் பட்டவர் ஸ்ரீமத் அப்பய்ய தீட்சிதர். ஒருசமயம் காமாட்சி அன்னையே அப்பய்யரை ஈஸ்வரனின் அம்சம் என்றார். ஏகாம்பரேஸ்வரனின் அருளைப்பெற்றவர். அவருடைய அற்புத வரலாற்றை மிகச்சுருக்கமாகக் காண்போம்.

அப்பய்யரின் தந்தை ரங்கராஜத் வரி; பாட்டனார் வக்ஷஸ்தல கணபதி யைப் பூஜித்துவந்த ஆச்சார்யா தீட்சிதர் ஆவார். அப்பய்யரின் பாட்டனார் விஜயநகர மன்னரான கிருஷ்ண தேவராயரது சபையில் ஆஸ்தான வித்வானாகப் பணியாற்றியவர். தந்தை ரங்கராஜத்வரி வேலூர் சின்னபொம்மராஜன் என்ற அரசரால் கௌரவிக் கப்பட்டுவந்தார். தாய்வழிப் பாட்டனார், வைஷ்ணவ குலத்தைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டாச்சார்யார்.

ஆச்சார்யா தீட்சிதருக்கு இரண்டு மனைவிகள். வைஷ்ணவ மனைவிக்குப் பிறந்தவர்தான் ரங்கராஜத்வரி. ரங்கராஜத் வரிக்குத் திருமணம் நடந்து, குழந்தை பாக்கியம் இல்லாததால், தமது குலதெய்வமான- விரிஞ்சிபுரத்தில் அருள் பாலிக்கும் மரகதவல்லி சமேத மார்க்க சகாயரை மனமுருகி வேண்டினார். ஈஸ்வரனும் கருணை கொண்டு அசரீரியாக, "சிதம்பரம் வா, உனக்கு அருள்புரிகிறேன்' என்றார். ஈசனின் ஆணையை ஏற்று மனைவியுடன் சிதம்பரம் அடைந்தார். அங்கு, தம்பதிகள் நாள்தோறும் சிவகங்கையில் நீராடி, சிவன் மற்றும் கோவிந்தராஜப் பெருமாளை தரிசனம் செய்துவந்தனர். இவ்வாறு ஐந்தாண்டுகள் சென்றன.

Advertisment

ஒருநாள் தம்பதிகள் பிரார்த்தித்துக் கொண்டிருக்கையில் வானில் அசரீரி வாக்கு, "பக்தா, உன் பிரார்த்தனையில் மனம் மகிழ்ந்தேன். உனக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் பிறப்பார்கள்' என்றது. இதைக்கேட்ட தம்பதிகள் மிக்க மகிழ்ச்சியடைந்தனர். அன்றிரவு நடராஜப் பெருமான் அர்ச்சகர் வடிவில் ரங்கராஜத் வரியின் இல்லத்திற்கு வந்து, அபிஷேக பழரசத்தைக் கொடுத்து ரங்கராஜத்வரியின் மனைவியை ஏற்கச் சொன்னார். அதன் பயனாக ஈஸ்வரனின் அருளால் அவரின் அம்சமான அப்பய்யர் கலியுக ஆண்டு 4634, ஆங்கில ஆண்டு 1554, புரட்டாசி மாதத்தில் பிறந்தார். அவருக்கு விநாயக சுப்ரமணியன் என்று திருநாமம் சூட்டினர்.

எனினும், குழந்தையை "அப்பய்ய' என்று அழைத்தே மகிழ்ந்தனர். இரண்டாண்டுகள் சென்றதும் இரண்டாவது மகன் பிறக்க, அவருக்கு ஆச்சார்ய என்று பெயரிட்டனர். இதன்பின்னர் இரண்டாண்டுகள் கழித்துப் பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஞானாம் பிகை என்று பெயரிடப்பட்டது.

ஆரம்பகாலத்தில் அப்பய்யருக்கு தந்தையே குருவாக இருந்தார். பின்னர், குரு ராமகவி அவர்களிடம் காவியம், நாடகம், அலங்காரம் முதலியவற்றைக் கற்றார். ஐந்து வயதிலேயே அப்பய்யர் அழகான முறையில் சாகித்யம் செய்யும் திறமையும் பெற்று இளஞ்சூரியனைப்போல் பிரகாசித்துவந்தார். அப்பய்யருக்கு உரிய காலத்தில் உபநயனம் நடந்தது.

Advertisment

seaaரங்கராஜத்வரி எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்றார். அடையப்பலம் என்ற கிராமத்தில் வசித்துவந்த சமயத்தில் தன் குமாரர்களை அழைத்து, ""குழந்தைகளே, நீங்கள் அகங்காரமற்றவர்களாக இருக்க வேண்டும். சந்திரசேகரரைப் பூஜித்து வாருங்கள். விபூதி, ருத்ராட்சம் அணிந்து, அவ்வாறுள்ளவர்களை சிவனாகவே கருதி வணங்கவேண்டும். பரமேஸ்வரனை யாகங்களால் ஆராதிக்க வேண்டும்'' என்றெல் லாம் உபதேசித்து சிவசாயுஜ்யம் அடைந் தார். அப்போது அப்பய்யருக்கு வயது பதினாறு. ரங்கராஜத்வரியின் மறைவுக்குப் பின்னர் அரசர் சின்னபொம்மன், அப்பய்ய ரையும் அவரது தம்பியையும் தனது சபையில் வித்வான்களாக்கி தொடர்ந்து ஆதரித்துவந்தார்.

மன்னருடைய அவையில் வைஷ்ணவ ஸ்ரீநிவாஸ குரு தாதாச்சாரியார் மந்திரியாக இருந்தார். அவருக்கு ஆரம்பத்திலிருந்தே அப்பய்யரைப் பிடிக்காது. ஒருவேளை தன்னுடைய திறமையால் மன்னரையே சிவபக்தராக்கி விடுவாரோ என்ற ஐயப்பாடு இருந்த காரணத்தினால் அப்பய்ய ரைப் பிடிக்காமல் போயிருக்கலாம். இதன் காரணமாகவே தாதாச்சாரியார் அப்பய் யருக்குக் கொடுத்த தொல்லைகள் ஏராளம். அது தனி வரலாறு.

அதையும் கடந்து அப்பய்யரின் புகழ் நாளுக்குநாள் வளர்ந்துகொண்டே இருந்தது. இந்த சமயத்தில் சந்திரசேகர பூபாலன் என்ற அரசனின் ஆதரவு பெற்ற ரத்னகேட தீட்சிதர் என்ற பண்டிதர் அப்பய்யருடன் வாதாட காஞ்சிபுரம் வந்தார். அப்போது அவர் வாதில் வெற்றிபெற அன்னை காமாட்சியம்மனை வேண்டியபோது, காமாட்சி நேரில் காட்சி கொடுத்து, "அப்பய்யர் சிவனின் அம்சம்.

அவருடன் வாதம் வேண்டாம். உனது மகள் மங்களாம்பிகையை அவருக்கு கன்னிகா தானம் செய்து கொடுத்து, அவ்வழியில் அப்பய்யருக்கு குருவுமாகலாம்' என அருளாசி கூறினார்.

இதேசமயத்தில் சிவபக்தரான அப்பய்யரின் கனவில் ஏகாம்பரநாதர் தோன்றி, "மங்களாம்பிகையை மணம்புரிந்து நீடூழி வாழ்க' என அருளாசி வழங்கி னார். இவ்வாறு அன்னை காமாட்சி மற்றும் ஏகாம்பரநாதரின் அருளாசியோடு அப்பய்யருக்கும் மங்களாம்பிகைக்கும் திருமணம் சிறப்பாக நடந்தேறியது.

பின்னர், அப்பய்யர் பிரம்மவாஸ்து என்ற ஊரில் வசித்துவந்தார். சிவத்தொண்டு செய்துகொண்டும், சிவனடியார்களுக்கு சாஸ்திரப் பிரவசனங்கள் செய்துகொண்டும் வாழ்ந்துவருகையில், தமது தந்தை கூறியதற்கேற்ப யாகங்களும் செய்து வந்தார்.

முறையாக வாஜபேய யாகம் செய்பவருக்கு மன்னரே வெண்குடை பிடித்து மரியாதை செய்வது வழக்கத்தில் இருந்தது.

அவ்வாறு அவர் யாகம் செய்தபோது, சின்ன பொம்மராஜனைத் தவிர பல மன்னர் களும் வந்திருந்து யாகத்தைச் சிறப்பித்தனர். தஞ்சாவூர் மன்னர் நரசிம்ம பூபால வர்மன் தீட்சிதருக்கு வெண்குடை பிடித்தார்.

தீட்சிதர் மிக விமரிசையாக வாஜபேய யாகத்தை நடத்திய விவரங்களை சின்ன பொம்மராஜன் அறிந்ததும், தான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லையே என்ற ஏக்கம் உண்டானது. தீட்சிதரை நல்லமுறையில் கௌரவிக்கத் தீர்மானித்தார். அரசரின் மும்முறை அழைப்பிற்குப் பின்னர், அவரது வேண்டுகோளுக்கிணங்கி அவரின் அரசவையில் ஆஸ்தான வித்வானா கப் பணியாற்றத் தொடங்கினார். இதற்கேற்ப அவர் வேலூரில் வசித்துவரலானார்.

இவ்வாறாக, தம் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தசமயம் பல நூல்களை இயற்றினார். அவற்றுள் மிகச் சிறந்த நூலாக "சிவார்க்கமணி தீபிகா' அமைந்தது. அதற்காக மன்னர் சின்ன பொம்மராஜன் தீட்சிதருக்கு கனகாபிஷேகம் செய்துவைத்தார். மேலும், இந்நூலை நாடெங்கிலும் பிரசாரம் செய்யத் தேவையான உதவிகளையும் செய்தார். கனகாபிஷேகத்தில் தமக்களிக்கப்பட்ட பொருட்களைக்கொண்டு, அவரது ஊரான அடையப்பலத்தில் காலகண்டேஸ்வரர் என்ற சிவாலயத்தை உருவாக்கி முறைப்படி ஆராதித்துவந்தார். தீட்சிதருக்கு இறைவனின் அருளால் நீலகண்டன், உமாமகேஸ்வரன், சந்திரவதம்சன் என்ற மூன்று மகன்களும், மரகதவல்லி, மங்களாம்பா என்ற இரண்டு மகள்களும் பிறந்தார்கள்.

ஒருவன் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுக்க விரும்பினால், அவன் எடுத்துவரும் முத்தின் எண்ணிக்கையைவிட ஆழ்கடலில் மீதமுள்ள முத்துகளின் எண்ணிக்கையே அதிகம்.

அப்பய்யரின் அமுதம் போன்ற வரலாற்றை ஒரு கட்டுரையிலேயே கூறிவிடமுடியாது. ஆகவே, ஸ்ரீஅப்பய்யரின் உபதேசங்களில் ஒன்றிண்டைக்கூறி முடிப்போம்.

"மனம், வாக்கு, காயம் இம்மூன்றை யும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மனதால் தியானிக்கவேண்டும். வாக்கினால் ஸ்தோத்திரங்கள் செய்யவேண்டும். காயம் என்கிற உடலால் வந்தனம், ஆலய தரிசனம், அர்ச்சனை ஆகியவற்றை செய்துகொண்டுவந்தால் நற்கதி கிடைக்கும். பெறுதற்கரிய பேறாகக் கிடைத்த இந்த மனிதப் பிறவியை வீணாக்காது, ஈசனைப் பூஜித்து, அவருடைய அருளைப் பெறவேண்டும்' என்பது அவரது உபதேசம். (அவர் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வுகளை அவ்வப்போது காணலாம்.)